தூய்மை பணியைத் தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய வேண்டுமெனத் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து 14 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவோடு இரவாக மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தூய்மை பணியைத் தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் தூய்மை பணியைத் தனியாரிடம் வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, சென்னை மாநகராட்சியுடன் தமிழ்நாடு அரசு கலந்து பேசி தூய்மை பணியாளர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தைத் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.